×

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் இடையே அமைத்த கம்பி வலைகளை அகற்ற வேண்டும்

திருவள்ளூர், மார்ச் 3: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பயணிகள் நடைமேடைகள் இடையே, தண்டவாளத்தை பயணிகள் கடக்காதவாறு, கம்பி வலை அடைக்கப்பட்டது. இதனால் வயதான பயணிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்து திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், திருத்தணி இடையே புறநகர் ரயில்கள் மட்டும் 170 நடைகள் சென்று திரும்புகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் என ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து வருவோரும், திருத்தணி, வேலூர், காட்பாடியில் இருந்து வருவோரும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அப்போது, 6 நடைமேடைகள் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் தண்டவாளத்தை அடிக்கடி கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பயணிகள் நடைமேடை 1 மற்றும் 2 இடையே பயணிகள்  தண்டவாளத்தை கடக்காதவாறு, கம்பிவலையால் சென்னை டிஆர்எம் உத்தரவின் பேரில் 4 நாட்களுக்கு முன் அடைக்கப்பட்டது. இதனால் வயதான பயணிகள் நடை மேம்பாலம் மீது ஏறி செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு, திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் நேற்று ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே பொது மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அடைக்கப்பட்ட பாதையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்துவிட கோரிக்கை விடுத்தார். அப்போது திமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், பொன் பாண்டியன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அடிக்கல் நாட்டியதோடு நின்ற எஸ்கலேட்டர்கள் பணி
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ₹2 கோடி மதிப்பில் 2 எஸ்கலேட்டர்கள் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா கடந்தாண்டு இதே மார்ச் மாதம் 8ம் தேதி முதல் நடைமேடையில் நடைபெற்றது. தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 2 எஸ்கலேட்டர்கள் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து ரூ.2 கோடி மதிப்பில், ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் வந்துசெல்ல 2 எஸ்கலேட்டர்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அப்போதைய திருவள்ளூர் தொகுதி எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால் அடிக்கல் நாட்டினார். விழாவில், சென்னை மண்டல ரயில்வே முதன்மை அதிகாரி சத்தியநாராயண ஹரி உட்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின்னர் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி.வேணுகோபால் படுதோல்வி அடைந்தார். அதோடு,  2 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணியும் துவங்காமல் நின்றது.

Tags : Thiruvallur Railway Station ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...