×

அடிப்படை வசதிகள் மேம்படுத்த நூலகத்துறைக்கு தனி இயக்குனர்

திருவள்ளூர், மார்ச் 3:  நூலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நூலகத்துறைக்கு தனி இயக்குனரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தமிழகத்தில், திருவள்ளூர் உட்பட 32 மாவட்ட நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 1914 ஊர்புற நூலகங்கள், 715 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் உள்ளன. இந்த நூலகத்துறை கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கல்வித்துறை மூலம் நூலக இயக்கத்திற்கு திட்ட ஒதுக்கீடு, பணியாளர் நியமனம் போன்றவை இல்லை. பள்ளி கல்வித்துறை மூலம் கூடுதல் பொறுப்பாகவே நூலக துறை இயக்குனர் நியமனம் கடந்த 39 ஆண்டுகளாக நடந்து வருகிறது.இத்துறைக்கு தனி நிதி ஆதாரம் கிடையாது. உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் 10 சதவீதம் நூலக வரியாக செலுத்தப்படுகிறது. ஆனால், உள்ளாட்சிகள் முறையாக நூலக வரியை செலுத்துவதில்லை. தமிழகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் நூலக வரி நிலுவையில் உள்ளது.இதனால் புதிய கட்டடம், பணியாளர் நியமனம், நூலகம் தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. ஊர்ப்புற நூலகங்களில் ரேக் வசதி இல்லாமல் நூல்களை கட்டிப்போடும் நிலை பல ஆண்டு காலமாக தொடர்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’உள்ளாட்சிகள் நூலக வரியை உரிய காலத்தில் செலுத்துவதில்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்த புரவலர் சேர்க்கை, உறுப்பினர் சேர்க்கை, தன்னார்வலர்களை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இது நூலகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நூலகர்கள் தங்கள் பணத்தை செலவழிக்கின்றனர். எனவே, மாநில அரசு உள்ளாட்சிகளில் நிலுவையில் உள்ள நூலக வரியை வசூலித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நூலகத்துறைக்கு தனி இயக்குனரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : facilities ,Library Department ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...