×

பொன்னேரி அருகே பெரும்பேட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி

பொன்னேரி, மார்ச் 3: பொன்னேரி அருகே பெரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், பள்ளி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதரை அகற்றவும் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெரும்பேடு குப்பம், சத்திரம், லிங்க பையன் பேட்டை, ஏறுசிவன், லட்சுமிபுரம், மத்ராவேடு, கம்மவார்பாளையம் கண்டிகை, கொளத்தூர், பெரிய மனோபுரம், சின்ன மனோபுரம், எல்.எஸ் புதூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.  தலைமை ஆசிரியர் உள்பட 22 ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதில்  விஷ ஜந்துக்கள் வசிக்கிறது. பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள புல் மற்றும் செடிகொடிகளை மேய கால்நடைகள் சுற்றித் திரிகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.

மேலும், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தை திறந்தவெளி பாராக குடிமகன்கள் பயன்படுத்துகின்றனர். காலி மதுபாட்டில்கள், மிஞ்சம் உணவு பண்டங்கள், காலி டம்ளர்களை அப்படியே வீசி செல்கின்றனர். அத்துடன் இயற்கை உபாதைகளையும் கழிக்கின்றனர். இதனால் அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் சமூக விரோத செயலுக்கும் சிலர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. எனவே, பள்ளி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், அங்குள்ள முட்புதரை அகற்றவும் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Government School ,Ponneri ,
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...