×

சிவகாசியில் பணம் பறிக்கும் நோக்கில் கோச்சிங் சென்டர் துவங்குவது அதிகரிப்பு கல்விதுறை அதிகாரிகள் கண்காணிப்பார்களா?

சிவகாசி, மார்ச் 3: சிவகாசியில் ஏழை மாணவர்களிடம் பணம்பறிக்கும் நோக்கில்  மருத்துவ கல்வி  நுழைவுத்தேர்வுக்கான (நீட்) கோச்சிங் சென்டர்கள்  துவங்கப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை கல்வி துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட கோரிக்கை எழுந்துள்ளது.  மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்சி கல்வி வாரியம் நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பதால் கிராமப்புற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.  தமிழக அரசு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பு கானல் நீராகி வருகிறது. இத்தகைய சூழலால் மாணவர்கள் தற்போது நீட் நுழைவு தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி சிலர், போலியான பெயரில் நீட்  தேர்வு பயிற்சி  மையங்களை சிவகாசியில் துவக்கி நடத்தி வருகின்றனர். இவர்கள் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த  திறமையான பயிற்சியாளர்கள் மூலம்  நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என விளம்பரம் செய்கின்றனர்.  இவர்களின் கவர்ச்சி விளம்பர யுக்திகளை கண்டு அப்பாவி ஏழை மாணவர்கள்களின் பெற்றோர்கள் சிலர் இந்த மையங்களில் அதிக பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். இந்த மையங்களை நடத்துவோர் பலர், கல்வித்துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நீட் நுழைவு தேர்வு பாடங்களில் போதிய கல்வி அறிவும் கிடையாது. வர்த்தக நோக்கில்  நீட் தேர்வில் போதிய அனுபவம் இல்லாத நபர்களை கொண்டு மாணவர்களுக்கு  பயிற்சி அளித்து வருகின்றனர். ஒரு சிலர் வெளி மாநிலங்களில் பிரபலமாக உள்ள பயிற்சி மையங்களின் பெயர்களில் முறையான அனுமதியின்றி அந்த நிறுவனங்களின் பெயர்களில் சிவகாசியில் பயிற்சி மையங்களை துவக்கியுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் முழு நேர பயிற்சி அளிப்பதாகவும், பிளஸ் 2படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அறிமுக பயிற்சி வகுப்பு நடத்துவதாகவும் விளம்பரப்படுத்துகின்றனர். இவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களால் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அறியாமையில் உள்ள ஏழை கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக பணம் கொடுத்து பயற்சி மையத்தில் சேர்த்து வருகின்றனர். வர்த்தக நோக்கில் போலியாக செயல்படும் மையங்களை கண்டறிந்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : education officials ,coaching centers ,Sivakasi ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...