×

திருவில்லிபுத்தூர் யூனியனில் முள் முளைத்து கிடக்கும் இ - சேவை மையங்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

திருவில்லிபுத்தூர், மார்ச் 3: திருவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால், முட்செடிகள் முளைத்து இ - சேவை மையக்கட்டிடங்கள் சேதமடையும் நிலையில்
உள்ளன. திருவில்லிபுத்தூரில் யூனியன் பகுதியில் உள்ள முக்கிய பஞ்சாயத்துகளில் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் இ - சேவை மையங்கள் கட்டப்பட்டது. அந்த வகையில் அத்திக்குளம் தெய்வேந்திரி பஞ்சாயத்தில் இனாம் கரிசல்குளம் பகுதியிலும், நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான் ஆகிய பஞ்சாயத்துக்களில் இ-சேவை மையங்கள் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால், ஆண்டுகள் பலவாகியும் இந்த மையங்கள் செயல்படாமல் உள்ளது.பல லட்சம் செலவில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் பயன்பாட்டுக்கு வராமலும் மற்றும் பஞ்சாயத்து தொடர்பான வேலைகளுக்கும் பயன்படுத்தாமலும் காட்சிப்பொருளாக உள்ள இந்த கட்டிடத்தை சுற்றி செடிகளும், கொடிகளும், முட்களும் வளர்ந்துள்ளன.

 இதுகுறித்து திருவில்லிபுத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியக்குழு உறுப்பினர் மூர்த்தி கூறுகையில், `` அத்திகுளம் தெய்வேந்திரி பகுதியில் உள்ள இ-சேவை மையம் ரூ.17 லட்சத்திலும், அச்சம்தவிர்த்தான் பகுதியில் உள்ள இ-சேவை மையம் ரூ.14 லட்சத்திலும் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத இந்த கட்டடங்களுக்கு பணத்தை வீண் செய்வதை தவிர்த்து விட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவும் உதவுவதில் நிதியை ஒதுக்கியிருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு கட்டிடங்களை கட்டி வைத்து சுற்றிலும் செடி, கொடிகள் முளைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது வருத்தத்தையளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்படாமல் இருக்கும் இந்த கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் திருவில்லிபுத்தூர் பகுதியில் பல்வேறு பஞ்சாயத்துகளிலும் இதேபோல் இ - சேவை மையங்கள் கட்டப்பட்டு  காட்சி பொருளாகத்தான் உள்ளன. இவற்றையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அரசு சார்ந்த மற்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!