×

வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் அடிப்படை வசதி இல்லை

* இடிந்து விழும் அபாய நிலையில் வீடுகள்
* கழிவுநீர் தேங்கி பரவுகிறது தொற்றுநோய்

சிவகாசி, மார்ச் 3: வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் வாறுகால், கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதார சீர்கேட்டால் இங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது.
வெம்பக்கோட்டை தாலுகா கன்டியாபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது. இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் பழுதடைந்து கிடப்பதால் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. அத்துடன் முகாமில் கழிவுநீர் வாறுகால் முறையாக அமைக்கப்படவில்லை. வெம்பக்கோட்டை அணை பகுதியை ஓட்டி முகாம் அமைந்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு அருகிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் பன்றிகள் உலவி வருவதால் குழந்தைகளுக்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. மேலும் இரவு நேரங்களில் கொசுத்தொல்லையால் மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

முகாமில் பெண்களுக்கு ரூ. 14 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த கழிப்பிடம் கதவுகள், சுவர்கள் சேதமடைந்து பயனற்ற நிலையில் கிடக்கிறது. இதனால் பெண்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரச் சீர்கேடு  உண்டாகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதே போன்று ஆண்கள் கழிப்பறையை தூய்மைப்படுத்த பணியாளர்கள் நியமிக்க படாததால் கழிப்பிடம் பயன்படுத்தவே முடியவில்லை. முகாமில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், குடிநீர் பற்றாக்குறையாக வருவதால் அடிபம்புகளில் அடித்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படாததால் தினமும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து அகதிகள் முகாமை சேர்ந்த சுதாகர் கூறுகையில், `` முகாமில் உதவி தொகை பெறுவதில் இரண்டு, மூன்று நாட்களாகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் வாறுகால் கழிவுநீர் வீடுகளை சுற்றிலும் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கி வருகிறது. வீடுகளில் பராமரிப்பு பணிகள் பெயரளவில் செய்யப்பட்டுள்ளதால் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் அவதிப்படுகின்றனர்’’ என்றார்.

Tags : refugee camp ,Vembakkottai ,
× RELATED ரூ.10 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு தொழிலாளர் போராட்டம்