×

துப்புரவு பணியின்போது கையுறை வழங்கவில்லை விஷ ஊசி குத்தியதால் கையிழந்த தொழிலாளி நிவாரணம் கோரி மனு

* கருணை அடிப்படையில் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும்
* தேனி நகராட்சி நிர்வாகம் உதவவில்லை என பரபரப்பு புகார்

தேனி, மார்ச் 3: தேனி நகராட்சியில் துப்புரவு பணியின்போது, விஷ ஊசி குத்தியதில் கை அகற்றப்பட்ட ஊழியர், நிவாரணம் கோரி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். தேனி, ஒண்டிவீரன் நகரில் குடியிருப்பவர் சேகர்(55). இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேனி - அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக கடந்த 2017ம் ஆண்டு பணி புரிந்தேன். அப்போது வீரப்ப அய்யனார் கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் வாட்டர் சப்ளை நிறுவனத்தின் அருகே பாலத்தின் அடியில் அடைப்பு ஏற்பட்டதை துப்புரவு செய்தேன். அப்போது, நகராட்சி நிர்வாகம் எனக்கு கையுறையோ வேறு உபகரணங்களோ வழங்கவில்லை. துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, சாக்கடையில் இருந்த ஒரு மருந்து செலுத்தும் ஊசி கையில் குத்தியது. இதற்கு மருத்துவம் பார்த்தாலும், விஷம் ஏறி கை அழுகியது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் எனது கையை வெட்டி அகற்றினர்.
இதனையடுத்து, எனது இடது கை மற்றம் இடது காலும் செயலிழந்து விட்டது. இதனால் என்னை நகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்து விட்டது. வேலையின்றி வறுமையில் உள்ள எனது குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. சம்பளமோ வேறு வருமானமோ இல்லாமல் வறுமையில் வாழும் என் குடும்பத்திற்கு மறுவாழ்வு கிடைக்க எனது மனைவிக்கு துப்புரவுப் பணியாளர் பணி கேட்டு கடந்த 2 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கருணை அடிப்படையில் என் குடும்பத்தினருக்கு வேலைவழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தார்.


Tags :
× RELATED கொரோனா சிவப்பு மண்டலத்தில்...