×

தென்னையில் வெள்ளை ஈ பாதிப்புகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 3: தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு இயற்கை வழிமுறைகளை பின்பற்ற தென்னை விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 7ஆயிரத்து 332 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை மரங்கள் அதிகமாக உள்ள வட்டாரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சிதாக்குதல் சமீப காலமாக தென்படுகிறது. வயதில் முதிர்ந்த வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் தென்னை ஓலைகளின் பின்புறத்தில் இடுக்கின்றன. குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை ஓலைகளின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. மேலும் அவை தேன் போன்ற கழிவுகளையும் வெளியேற்றுவதால் ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும். இந்த ஈக்கள் தென்னை மரங்கள் மட்டுமல்லாது வாழை, சப்போட்டா பயிர்களையும் தாக்குகிறது. எனவே, ஈ பரவாமல் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகள் ஐந்து அடிக்கு ஒன்றை 10 அடி உயரத்தில் இரண்டு மரங்களுக்கிடையே கட்ட வேண்டும். மஞ்சள் நிற விளக்குப்பொறிகள் ஏக்கருக்கு இரண்டு வீதம் தென்னந்தோப்புகளில் வைத்து அவற்றை மாலை  மணி முதல் 11மணி வரை ஒளிரச் செய்யலாம். தாக்குதல் ஏற்பட்டுள்ள தென்னை மரங்களின் மீது தெளிப்பான் கொண்டு வேகமாக தண்ணீரை அடிப்பதன் மூலம் அழிக்கலாம். இதுபோல் என்கார்சியா ஒட்டுண்ணிகள் ஈக்களின் சேதத்தை பெருமளவில் குறைக்கிறது. ஒட்டுண்ணிகள் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டிப்பாக அடிக்க கூடாது. கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags : South ,
× RELATED புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள்...