×

பரமக்குடி நகர் பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள்

பரமக்குடி, மார்ச் 3:  ஷேர் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஓட்டுனர்கள் பொருத்தி ஒலிப்பதால், பிற வாகன ஓட்டுனர்களுக்கு பல விதங்களில் தொந்தரவு ஏற்பட்டுவருவதோடு, நகரில் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. பரமக்குடி நகரில் அதிக எண்ணிக்கையில் டூவீலர் மற்றும் பிற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்களை பொருத்தியுள்ளனர். குறிப்பாக மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், அதிக ஒலி எழுப்பும் ஒலிபான்களை ஒலிக்க கூடாது என விதிமுறைகள் உள்ளன. இருந்தாலும் பெரும்பாலான வாகனங்கள் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நகரின் ஒலி மாசு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மாதிரியாக பொதுமக்களுக்கு இடையூறாக வைத்துக்கொண்டு முன்னே செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு திடீரென ஒலி எழுப்புவதால், அந்த வாகன ஓட்டுனர் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதனால் அதிகளவில் ஒலி எழுப்பும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஓட்டபாலம் ஆனந்த் கூறுகையில், பரமக்குடி பகுதியில் உள்ள சில வாகனங்களில் நாய், யானை,குரங்கு உள்ளிட்ட குரல்களை கொண்ட ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முன்னால், பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்த நிலையில் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுவாக ஒலிபான்கள் 91-104 டி.சி.எம். வரை ஒலி எழுப்பலாம். ஆனால் விதிமுறையை மீறி ஒலிபான்கள் ஒலிக்கப்படுகிறது. வட்டார ஆய்வாளர் உடனடி நடவடிக்கை எடுத்து நகரின் மாசுபடுதலை தடுக்கவேண்டும் என கூறினார்.

Tags : Paramakudi Nagar ,
× RELATED பரமக்குடி நகர், புறநகர் பகுதிகளில்...