×

வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 3: வைகை நதியில் ஆக்கிரமிப்பையும், மாசுபடுவதையும் தடுக்க வேண்டும் என ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் சத்தியகோபால் வலியுறுத்தியுள்ளார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வைகை நதி மீட்பு, பாதுகாப்பு மற்றும் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு  நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்தியகோபால் தலைமை வகித்து பேசியதாவது:  மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றை புனரமைக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்ற ஆலோசனைப்படி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.  வைகை ஆற்றின் எல்லை மறுவரையறை, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சீமைக்கருவேலம் மற்றும் புதர்களை அகற்றும் பணி, நீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது. வைகையை புனரமைப்பின் மூலம் 6 மாவட்ட விவசாயத்திற்கு ஆதாரமாகவும், விவசாயம் வளம் பெறுவது மட்டுமல்லாது, நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும். நதியின் பயன்பாடு அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.  கூட்டத்தில், தாலுகா வாரியாக நீர்நிலைகள் எண்ணிக்கை குறித்தும், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் எண்ணிக்கை குறித்தும் விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கண்மாய், ஊருணி, குளம், குடிமராமத்து பணிகள் எத்தனை இடங்களில் நடந்துள்ளன? ஆக்கிரமிப்புகள் உள்ளதா? அகற்றும் நடவடிக்கை குறித்தும், நீர்நிலைகள் எல்லைகள் அளவிட்டு எல்லைக் கற்கள் நிறுவுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Rivers Restoration Executive ,Stop Aggression ,Vaigai River ,
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...