×

ஓடையை தூர்வார கோரி அளித்த மனுவுக்கு ஆர்டிஓ அனுப்பிய தபால் 2 மாதம் தாமதமாக கிடைத்தது விவசாயி அதிர்ச்சி

வாடிப்பட்டி, மார்ச் 3: வாடிப்பட்டியில் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரி விவசாயி மதுரை கோட்டாட்சியரிடம் கொடுத்த மனு மீதான குறிப்பானை இரண்டு மாதம் கழித்து விவசாயிக்கு தபால் மூலம் கிடைத்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுவாடிப்பட்டி தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா, விவசாயி. இவர் கச்சைகட்டி கருப்பண மணியகாரன் கண்மாய் மறுகால் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிமராமத்து பணி மேற்கொள்ள கடந்த 2017 முதல் தொடர்ச்சியாக மனு கொடுத்து வருகிறார். ஆனால், அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், ஓடையை தூர்வார கோரி கடந்த ஆண்டு நவம்பரில் மதுரை வருவாய் கோட்டாட்சியருக்கு மீண்டும் மனு அளித்தார். ஆனால், அந்த மனுவுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நினைத்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மனு மீது கோட்டாட்சியர் எடுத்த நடவடிக்கை குறித்த பதில் மனு கிடைத்தது.

விவசாயி கொடுத்த மனுவிற்கு கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து கடந்த டிச.17ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், அந்த கடிதம் பிப்.26ம் தேதியே விவசாயிக்கு கிடைத்துள்ளது. உயரதிகாரி பிறப்பித்த குறிப்பாணை இரண்டு மாதம் தாமதமாக கிடைத்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது குறித்து விவசாயி கருப்பையா கூறுகையில், ‘கச்சைகட்டி மணியக்காரன் கண்மாய் மறுகால் ஓடையை பலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரி 10க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மதுரை கோட்டாட்சியரிடம் கொடுத்த மனுவுக்கு அவர் நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டு டிச.17ம் தேதி எனக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்த பதில் கடிதம் காலம் கடந்து எனக்கு கிடைத்துள்ளது. கடிதத்தில், வாடிப்பட்டி தாசில்தார், எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் தாலுகா அலுவலகம் சென்று கோட்டாட்சியர் அனுப்பிய கடிதத்தை கொடுத்தால், காலம் கடந்து வருவதாக என்னை அலைக்கழிப்பார்கள். அரசு ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவது என்னை போன்ற விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : release ,RTO ,stream ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...