×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை இரவிலும் பார்க்க ஏற்பாடு: முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்களை அதிகம் ஈர்ப்பது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் இயற்கை பாதுகாப்போடு  பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விடுமுறை விடப்படுகிறது. வண்டலூர் பூங்கா மிகவும் பெரியது  என்பதால் சைக்கிள் மூலம் சுற்றிப்பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி வாகனங்கள் மூலம் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட விலங்குகளை அருகிலேயே சென்று பார்க்கவும் சிறப்பு  கட்டணத்துடன் கூடிய வாகன வசதியும் உள்ளது.

இந்நிலையில், இரவு நேரங்களிலும் உயிரியல் பூங்காவை மின் ஒளியில் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று  சென்னை தலைமை செயலகத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரவிலும் விலங்குகளின் செயல்பாடுகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக இரவு உலா அழைத்து செல்வது குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

Tags : Vandalur Zoo ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை