×

சுடுகாட்டை சுற்றி கட்டிய சுற்றுச்சுவரை இடிக்க வலியுறுத்தி சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை சுடுகாட்டை சுற்றி தனியார் அமைத்த சுற்றுச்சுவரை இடிக்க வலியுறுத்தி, சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த  பூவலையில் இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை ஒட்டி அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டு பகுதியை ஒட்டி உள்ள இடத்தை தனியார் ஒருவர் 2 வருடத்துக்கு முன்பு வாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து  அவர் சுடுகாட்டிற்கு செல்லும் வழியை அடைத்து, பஞ்சமி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால், அவர்களது சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து  சுடுகாட்டு பாதையில் உள்ள சுற்றுச்சுவரை அகற்ற பூவலை பகுதி மக்கள் கடந்த 2 வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சுற்றுச்சுவர் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், பூவலை இருளர் காலனி பகுதியை சேர்ந்த முத்தியால் (53) நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரது சடலத்தை புதைக்க சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். ஆனால்  சுடுகாட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த சுவர்,  அதற்கு தடையாக இருந்தது. இதனைத்தொடர்ந்து,  அந்த சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் திட்டமிட்டனர். சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பூவலை மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ஜெ.அருள் உள்ளிட்டோரும்  சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச் செல்வி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுச்சுவரை  இடிக்காமல் மாற்று இடத்தில் சுடுகாடு அமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு பொதுமக்கள் தரப்பில், சுற்றுச்சுவரை அகற்றி சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தராவிட்டால், தாங்களே சுற்றுச்சுவரை உடைத்து சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்வதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, அந்த  பகுதியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பூவலையில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து முத்தியாலின் சடலம் வைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்தும் அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ஜெ.அருள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாலிபர் சங்க மாநில தலைவர் சி.சு.குமார், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன்,  பொருளாளர் சண்முகவேலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முத்தியாலின் உடலை எடுத்துக் கொண்டு சுடுகாடு நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் சாலையிலேயே சடலத்தை வைத்து அங்கேயே உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் மாற்று வழியில் சுடுகாட்டிற்கு செல்வது குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாற்று வழிக்கு  பொதுமக்கள் உடன்படாத நிலையில் அதிகாரிகள் சுடுகாட்டு பாதையை சுத்தம் செய்து சுற்றுச்சுவரை இடித்து பாதை அமைத்து தருவதாக கூறினர். இதனை தொடர்ந்து, சுடுகாட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில்  அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags : demonstration ,road ,demolition ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...