×

திருப்போரூர் - நெம்மேலி இடையே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: தனியார் மருத்துவமனை அடாவடி

சென்னை: திருப்போரூர் - நெம்மேலி இடையே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழைய மாமல்லபுரம் சாலையையும்,  கிழக்கு கடற்கரை  சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ  தூரத்துக்கு சாலை அமைந்துள்ளது. இச்சாலையின் இருபுறமும் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்துக்கு  செல்ல பல்வேறு இடங்களில்  குறுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது  உப்பள ஒப்பந்தம் முடிந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக இங்கு உப்பு  உற்பத்தி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள நட்சத்திர  ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் குப்பை கழிவுகள் வாகனங்களில்  கொண்டு வரப்பட்டு, இந்த சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதனால், உப்பள பகுதி மாசடைந்து வருவதால், இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், சமீப காலமாக இந்த சாலையோரத்தில் காலாவதியான  மருந்துகள், மருத்துவக் கழிவுகளை சிலர் கொட்டி  வருகின்றனர். தனியார் மருத்துவமனை சார்பில் கொட்டப்பட்டுள்ள இந்த மருத்துவ கழிவுகளில் ஊசி, காலாவதி மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. யாரேனும் இதை எடுத்து தவறுதலாக பயன்படுத்தினால், அசம்பாவிதம்  ஏற்படும் நிலை உள்ளது.
இதனிடையே, நேற்று அவ்வழியாக நடைபயிற்சி சென்ற சமூக ஆர்வலர்கள், இந்த மருத்துவ கழிவுகளை  படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தும்  சாலையில் இதுபோன்று மருத்துவ கழிவுகளை  கொட்டிச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,Thirupporeur - Nemmeli ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி