×

பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பெரம்பூர்:  பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மாற்றுத்திறனாளிகள் பெறும்பாலானோர்  வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால்  அவர்களுக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.  இந்த உதவி தொகையை பெற ஒவ்வொரு  மாற்றுத்திறனாளிகளும் பல்வேறு சான்றிதழ்களை  சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ்களை பெற அவர்கள் தாசில்தார் அலுவலகம் மற்றும்  ஏனைய பிற அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை பலமுறை  வரவழைத்து அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை உதவித்தொகைகள் அஞ்சல்துறை வழியாக வழங்கப்பட்டு வந்தன.

இதில், பயனாளிகளிடம் அஞ்சல் துறை ஊழியர்கள் கமிஷன் கேட்டு தொல்லை செய்வதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது வங்கி கணக்கில் நேரடியாக பயனாளிகள் கணக்கில் செலுத்தபடுகிறது.  அவ்வாறு அஞ்சல் துறையில் இருந்து வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட தகவல்கள் பலருக்கு விடுபட்டுள்ளதால்  பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மாதம்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகை  நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலமுறை தாசில்தார் அலுவலகம் சென்று பல்வேறு சான்றிதழ்களை  சமர்ப்பித்தும் இதுவரை பலருக்கு அந்த உதவித்தொகை வரவில்லை.   சமீபத்தில் தினகரன் நாளிதழில்  வயதான பெண்மணி ஒருவருக்கு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில்  முதியோர் உதவித்தொகை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டது.   இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று  உதவித்தொகை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்கள்.  

  தற்போது மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக  பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்   பெரம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெரம்பூர்  தாசில்தார் அலுவலக  ஊழியர்களுக்கு எதிராக கோஷங்களை  எழுப்பியவாறு இருந்தனர்.
தகவலறிந்து வந்த செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்தர் மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்   சமரசம்  பேசினர். இதைத் தொடர்ந்து அவர்களை பெரம்பூர் தாசில்தார் அலுவலகம்  அழைத்து சென்று, தாசில்தாரிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தார் விஜயசாந்தி உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என  தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முருகன் என்பவர் கூறுகையில், ‘‘எனக்கு 34 வயதாகிறது. எனது அம்மா வசந்தா (68) என்பவர் சமீபத்தில்  இறந்து விட்டார். அம்மாவின்  வேலை எனக்கு கிடைக்க, வருமான சான்றிதழ் பெற கடந்த 1  மாதத்திற்கு  முன்பு பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.  இதுவரை எனக்கு வருமான சான்றிதழ் கிடைக்கவில்லை. நான் மாற்றுத் திறனாளி என்பதால் தினமும் இங்கு வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. அதையும் மீறி  இங்கு வந்து அதிகாரிகளை சந்தித்தால் நீங்கள் ஏன் நேரில் வருகிறீர்கள் அந்த சான்றிதழ் வந்தால்  நாங்களே போன் செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த போனும் எனக்கு  வரவில்லை.

ஒரு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தால் 21 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க  வேண்டும். ஆனால் நான் விண்ணப்பம் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த  வாரம் கூட தாசில்தார் அலுவலகம் வரும்போது வண்டியில் இருந்து  தவறி கீழே விழுந்து விட்டேன். அங்கிருந்தவர்கள்  மீட்டு என்னை ஆட்டோவில் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் இதுவரை எனக்கு சான்று வழங்கப்படவில்லை. எனவே  மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

குறைதீர்வு முகாமிலும் நடவடிக்கை இல்லை
பெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அரசால் வழங்கப்படும்  உதவித்தொகையை பெற்று வந்துள்ளார்.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை குறிப்பிட்ட அதிகாரிகளை  சந்தித்து உதவித்தொகை பெற  போராடி வருகிறார். ஆனால் இன்றுவரை அவருக்கு உதவித்தொகை கிடைத்தபாடில்லை. சமீபத்தில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் இதுபற்றி மனு அளித்துள்ளார். மேலும்  26ம் தேதி தண்டையார்பேட்டையில்  நடைபெற்ற  முகாமிலும் நேரடியாக மாவட்ட ஆட்சியரை  சந்தித்து கூறியுள்ளார். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.

Tags : Translators ,office ,Perambur Dasildar ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்