×

2018-19ம் ஆண்டுக்கான இலக்கை முடிக்காத மாநகராட்சி அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு குறையும் மவுசு: பழைய விண்ணப்பங்களை தூசுதட்ட அறிவுறுத்தல்

சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கான இலக்கை தற்போது வரை சென்னை மாநகராட்சி முடிக்கவில்லை என்றும், இதனால் பழைய விண்ணப்பங்களை தூசி தட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது  என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.  பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி 125 சி.சி.க்கு மிகாமல் உள்ள இருசக்கர  வாகனங்களை வாங்க 50 சதவீத மானியம் அல்லது 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் சக்கரங்கள் உடைய வாகனத்திற்கு அதிகபட்சமாக  31,250 வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தின் விதிகளை மாற்றி தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அதன்படி, வயது வரம்பு 40ல் இருந்து 45ஆக உயர்த்தப்பட்டது. மேலும் பயனாளி 8ம்  வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்பட்டது.

இதைத்தவிர்த்து ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல், அரசு துறைகளில் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்கள்,  அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர்  மற்றும் உதவியாளர் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.  இத்திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 9,519 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் 391 (4 சதவீதம்) மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். அதன்படி 2017 - 18ம் நிதி ஆண்டில் 9,138 ெபண்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2018 - 19ம் நிதி ஆண்டிற்கான விண்ணப்பம் பெறுவதற்கான  பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியது. இந்தாண்டில் தற்போது வரை 10,500 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 6500 பேர் வாகனங்களை வாங்கியுள்ளனர். எனவே இவர்களுக்கு மட்டும் மானியம்  வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2500 பேர் வானகங்களை வாங்காமல் உள்ளனர்.

இந்நிலையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டுக்கான இலக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2018-19ம் நிதியாண்டிற்கான  இலக்கை எட்ட முடியாததால், பழைய விதிகளை திருத்துவதுடன், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எடுத்து அவற்றில் தகுதியான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Target ,
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...