×

தமிழ் ஆட்சிமொழிசட்ட வார விழிப்புணர்வு பேரணி

சேலம், மார்ச் 3:சேலத்தில்  தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 1956 டிசம்பர் 27ம் நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படும் என தமிழக சட்டமன்றத்தில் நடந்த தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜோதி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ராமன் பேரணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, திருவள்ளூவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக வந்து மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, அரசு அலுவலங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், அம்மா மென்தமிழ் சொல்லாளர் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள் குறிப்புகள் எழுதுவது, ஆட்சிமொழி திட்ட விளக்கம் போன்ற பயிற்சி மற்றும் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. மேலும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பேரணியில், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு