×

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறித்து 4 மாவட்டங்களை கலக்கிய கொள்ளையர்கள் கைது

திருச்செங்கோடு, மார்ச் 3: நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த திருச்செங்கோடு போலீசார், 12 பைக், 7.5 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி வேளாளர் காலனியை சேர்ந்தவர் மலர் கொடி (70). இவர் கடந்த  மாதம் 21ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்ற போது, பைக்கில் வந்த வாலிபர்கள் இரண்டு பேர், அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து மலர்கொடி கொடுத்த புகாரின் பேரில், திருச்செங்கோடு நகர  போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாமக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்ஐ கௌதம், ரமேஷ்,  தியாகராஜன், சரவணகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், போலீசாரை பார்த்ததும் திரும்பிச்செல்ல  முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர்களை  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் கூட்டப்பள்ளியில் மூதாட்டி மலர்கொடியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சென்னை வேளச்சேரியை சேர்ந்த பிபிஏ பட்டதாரி ரவி(37), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி  மயிலாடும்பாறையை சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பதும் தெரியவந்தது.

குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டு, விஏஓ மணிவண்ணன் முன்பு  ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்செங்கோடு மற்றும் கோவை காரமடை ஆகிய  இடங்களுக்கு சென்ற போலீசார், 7.5 பவுன் நகை, 12 பைக்குகள் மற்றும் 2 விலை  உயர்ந்த செல்போன்களை மீட்டனர்.  தொடர்ந்து இருவரையும் திருச்செங்கோடு  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில்  வைக்கும்படி நீதிபதி முருகவேல் உத்தரவிட்டார். அவர்களை சிறையில் அடைத்தனர். ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கைவரிசை காட்டிய  கொள்ளையர்கள் பிடித்த, தனிப்படை போலீசாரை டிஎஸ்பி   சண்முகம் பாராட்டினார்.

Tags : gangs ,women ,districts ,
× RELATED அஞ்சலியின் 50வது படம்