×

ஆதிதிராவிட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 3:வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு, வீடு கட்ட அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என கலெக்டரிடம் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை மனு அளித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் வேப்பனஹள்ளி ஒன்றியம் வி.மாதேப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் ராணிமாதவன், பொதுமக்களுடன் வந்து கலெக்டர் பிரபாகரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம் வி.மாதேப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட பந்திகுறி கிராமத்தில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 900 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பெயிண்டர், கட்டிட வேலை, கார்பெண்டர், கம்பி வேலை, விவசாய கூலி, ஆடு, மாடு மேய்ப்பது, தினக்கூலி போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்த நிலமோ, வீடோ இல்லாததால், ஒரே வீட்டில் பல பேர் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். எனவே, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இவர்களுக்கு எகுடதம்பள்ளி-முஸ்லீம்பூர் கிராமங்களுக்கு இடையே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பண்ணந்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வேடியப்பன் தலைமையில் அளித்த மனுவில், பண்ணந்தூர் பெரியஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, அகரம் பாலத்திற்கு அருகில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரின்றி வாடும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக துவங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், தற்காலிகமாக தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!