×

உள்ளூர், ஆன்லைன் புக்கிங் டாக்ஸி டிரைவர்களுக்கு இடையே மோதல்

நாமக்கல், மார்ச் 3: திருச்செங்கோட்டில் உள்ளூர், ஆன்லைன் புக்கிங் டாக்ஸி டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. இதில் திருச்செங்கோட்டில் ஆன்லைன் புக்கிங்கில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள், கலெக்டரிடம் அளித்த புகார் மனு விபரம்: ஆன்லைனில் டாக்ஸி புக்கிங் செய்பவர்களுக்கு, ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு வரை டாக்ஸி இயக்கி வருகிறோம். ஆனால் திருச்செங்கோடு பகுதிக்கு வரும் போது, அங்குள்ள உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள், எங்களின் டாக்ஸி மறித்து பிரச்னை செய்கிறார்கள். இதனால் சுமார் 100 டாக்ஸி டிரைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். திருச்செங்கோடு டவுனில் நிலவும் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, எங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், ஆன்லைன் டாக்ஸி டிரைவர்கள் மீது, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Conflict ,booking taxi drivers ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு