×

விபத்தை ஏற்படுத்தியதாக கூறி கும்பல் தாக்கியதில் வாலிபர் சாவு

போச்சம்பள்ளி, மார்ச் 3: போச்சம்பள்ளி அருகே, கும்பல் தாக்குதல் நடத்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி(39). தனியார் பஸ் கண்டக்டரான இவர், கடந்த மாதம் 11ம் தேதி வாடமங்கலம் சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது சந்தூர் பட்டகப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் மீது, டூவீலர் மோதியது. இதில், நாகம்மாளுக்கு கால் உடைந்து அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்,பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, போதையில் வந்து நாகம்மாளை இடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறி,  அங்கிருந்தவர்கள் ரஜினியை அடித்து உதைத்தனர். அதனை தொடர்ந்து, ரஜினி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமாகவே, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, நாகம்மாளின் உறவினர்கள் அடித்ததால் தான், ரஜினி உயிரிழந்தார் என்று கூறிய உறவினர்கள், அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர், நடவடிக்கை எடுப்பதாக கூறி, ரஜினியின் சடலத்தை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நாகம்மாளின் உறவினர்களை கைது செய்தால் மட்டுமே, சடலத்தை வாங்குவோம் என கூறி, தர்மபுரி-போச்சம்பள்ளி சாலையில் இருமத்தூர் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பர்கூர் டிஎஸ்பி ராஜேந்திரன், சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : gang attack ,accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!