×

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகள் மாற்றும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளை மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் பிரதான 8 மதகுகளில், முதல் மதகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடைந்தது. உடைந்த மதகை அகற்றி விட்டு, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி புதிய மதகு பொருத்தப்பட்டது. இதையடுத்து, ₹19 கோடி செலவில் மற்ற 7 மதகுகளும் புதியதாக மாற்றப்படுகின்றன. இதற்காக பழைய மதகுகள் அகற்றப்பட்டு, கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதில் மதகின் இருபக்கத்திலும் 8 ரோலர்கள் பொருத்தப்பட்டு, மதகின் 3 கீழ் பாகங்களையும், நான்கு மேல் பாகங்களையும் வைத்து, அவற்றின் குறுக்கில் ஐந்து கேடர்களை வைத்து இணைக்கின்றனர். இப்பணிகள் அனைத்தும் முடிந்து இணைப்பு பாகம் முழுவதும் வெல்டிங் வைக்கப்படுகிறது.

கடந்த மாதம் 15ம் தேதி வரை 2, 3 மற்றும் 8வது மதகுகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 4 மற்றும் 7வது மதகுகள் அமைக்கும் பணிகளும் முடிந்து, ஐந்து மதகுகள் அமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடைந்தன. இவற்றுக்கு வெல்டிங் வைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து 6வது மதகின் கீழ் பாகத்தை பொருத்தி, 5வது மதகின் ரோலர்கள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில், நேற்று 24.40 அடியாக இருந்தது. கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்தும் முற்றிலும் நின்றது. அணையில் இருந்து 12 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

Tags : shifts ,Krishnagiri Dam ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...