×

மின்சார ரயிலுக்கு கடலூரில் வரவேற்பு

கடலூர், மார்ச் 3: மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்ததால் கடலூர் மார்க்கமாக மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே மின்சார நேற்று முன்தினம் முதல் ஓடத்தொடங்கியது. விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி கடந்த மாதம் மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் சோதனை நடத்தப்பட்டது. கடலூரில் இருந்து மீண்டும் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் 6 ரயில்கள் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு ரயில் இயக்கப்படும் என்று தென்னகரயில்வே அறிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரத்தில் காலை 5.55 க்கு புறப்பட்ட ரயில் 6.55 மணிக்கு கடலூர் துறைமுகம் சந்திப்பு வந்தது. மின்சார ரயிலுக்கு தென்னக ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முத்துக்குமரனார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ரயில் நிலைய மேலாளர் முரளிதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சங்க நிர்வாகிகள் ராஜ்மோகன், ராமகிருஷ்ணன், சித்ரகலா, சுப்பிரமணியன், குணா, ரவிக்குமார், திருவள்ளுவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல், மயிலாடுதுறையில் இருந்து காலை 5.40 மணிக்கு பயணிகள் ரயில்புறப்பட்டு விழுப்புரத்திற்கு வந்தடைந்தது. விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.30க்கும், மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.45க்கும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், விழுப்புரத்தில் மாலை 5.40க்கும், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.45க்கும் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், விழுப்புரத்தில் இருந்து மாலை 6.55க்கு புறப்படும் காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4.55க்கு புறப்படும் விழுப்புரம் பயணிகள் ரயில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!