×

காரைக்காலில் இலவச அரிசிக்கான பணம் கிடைக்காதவர்களின் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க நடவடிக்கை

காரைக்கால், மார்ச் 3:காரைக்காலில் இலவச அரிசிக்கான பணம் கிடைக்காதவர்கள் குறித்து கலெக்டர், எம்.எல்.ஏக்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் பத்திரிகையாளர்களிடம் கூறியது: புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், கடந்த பல ஆண்டுகளாக மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தேவையில்லாத குறுக்கீட்டால், இலவச அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டு, இலவச அரிசிக்கான தொகையை சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இத்திட்டம் பயனாளிகளுக்கு இதுவரை முழுமையாக சென்றடையவில்லை என்பது வேதனையான விஷயம். காரைக்காலில் சுமார் 1,450 மஞ்சள் நிற ரேஷன் அட்டைகள் சிகப்பு நிற அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே, மஞ்சள் நிற அட்டை வைத்திருப்போருக்கும் அதற்கான பணம் கிடைக்கவில்லை. சிகப்பு அட்டையாக மாற்றப்பட்டோருக்கும் அரிசிக்கான பணம் கிடைக்கவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,500 அட்டைகளுக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் இதுவரை சேர்க்கப்படாமல் உள்ளது. மாதாந்திர இலவச அரிசியும் கிடைக்காமல், அதற்கான பணமும் கிடைக்காமல் மக்கள் துன்பத்தில் உள்ளனர். எனவே காரைக்கால் மாவட்டத்தில், விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவச அரிசிக்கான பணத்தை உடனே வங்கிக் கணக்கில் சேர்க்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முக்கியமாக, காரைக்காலில் உள்ள பயனாளிகளுக்குப் பணம் வங்கிக்கணக்கில் சேரும் வகையில், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...