×

மாஜி அமைச்சர் வலியுறுத்தல் கீழ்வேளூர் மயானத்தில் பாலித்தீன் பைகளுடன் குப்பைகளும் எரிவதால் நச்சு வாயு புகை மூட்டம் பொதுமக்கள் கடும் அவதி

கீழ்வேளூர். மார்ச் 3: நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கீழ்வேளூர் மயானத்தில் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இந்த மயானம் கீழ்வேளூர் பேரூராட்சி, அகரகடம்பனூர் ஊராட்சியை சேர்ந்த வடக்கு வெளி, பிள்ளைதெரு வாசல், ஆலக்கரை, தெற்கு தெரு, வடக்குவெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சமத்துவ மயானமாக உள்ளது. இந்த சுடுகாட்டில் இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்படுகிறது. கீழ்வேளூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மயானத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று உடல்களை தகனம் செய்யும் அளவில் மயான கொட்டகை உள்ளது. மயானத்தை சுற்றி வேலிகள் மற்றும் வாசல் பகுதியில் கேட்டும் இல்லாமல் உள்ளது.

மயானத்தில் கீழ்வேளூர் பேரூராட்சியில் சேரும் குப்பைகள் தினம் தோறும் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. மேலும் இந்த குப்பைகள் எரிந்து சாம்பலாக தீ வைக்கப்படுகிறது. குப்பைகளில் உள்ள பாலித்தீன் பைகளுடன் குப்பை எரிவதால் சுடுகாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக வெள்ளைதிடல் உள்ளிட்ட பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் ஆஸ்துமா, கேன்சர் போன்ற நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த நச்சு புகையால் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு மூச்சு தினறல் ஏற்படுகிறது.

சடலஙகள் எரியூட்டப்படும் தகன மேடை அருகே குப்பைகளை எரிப்பதாலும், இறந்த மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி கழிவுகள் மயானத்தில் வெட்ட வெளியில் தினம் தோறும் கொட்டப்படுகிறது. புகை மூட்டமும், மயானத்தில் வெட்ட வெளியில் வீசப்படும் கோழி இறைச்சி கழிவுகளும், இறந்த கால்நடைகளும் எல்லா நாட்களும் துர்நாற்றம் வீசுகிறது. இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். அந்த நேரத்தில் புகை மூட்டம் மற்றும் துர்நாற்றங்களால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமூக ஆர்வலர் ஹானஸ்ராஜ் கூறுகையில், கீழ்வேளூர் பேரூராட்சி மக்கள் மற்றும் அகரக்கடம்பனூர் ஊராட்சியில் உள்ள சில கிராம மக்கள் கீழ்வேளூர் மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். மயானத்தின் ஒரு பகுதி கீழ்வேளூர் பேரூராட்சியின் குப்பை கிடங்காக உள்ளது. கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள குப்பைகளில் சேரும் பாலித்தீன் பைகளும் குப்பையை எரிக்கும் போது சேர்ந்து எரிகிறது. இதனால் எரியும் குப்பையில் இருந்த வெளி வரும் புகை நச்சு புகையாக மாறி அந்த புகை அருகில் உள்ள வெள்ளைதிடல், பிளைத்தெருவாசல் பகுதியில் சூழந்து அந்த பகுதி மக்களை அவதிக்கு உள்ளாக்கி வருகிறது.

தொடர்ந்து வீசும் நச்சு புகையால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு நுரையீரல் பிரச்னை, புற்றுநோய் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கோழி கடைகளில் சேரும் கோழி இறைச்சி கழிவுகளையும், இறந்த மாடு உள்ளிட்ட கால் நடைகளை மயானத்தில் திறந்த வெளியில் வீசுவதால் எந்த நேரமும் தூர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பல முறை பேரூராட்சியிடம் நேரில் சென்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடன் கீழ்வேளூர் மயானத்தில் சுடுகாடு மற்றும் இடு காடு இடத்தை சுற்றி சுற்று சுவர் எழுப்பி வாசலில் கேட் அமைக்க வேண்டும். இறந்தவர்களின் உடல் எடுத்து செல்லும் போது மட்டும் கேட் திறந்திட வேண்டும். மேலும் மயானத்தில் குப்பை கொட்டுவதை ஒழுங்குபடுத்துவதுடன் மயான பகுதியில் பூங்கா அமைத்து பராமரித்து வெளியூரில் இருந்து வருபவர்கள் கீழ்வேளூர் சுடுகாடு பற்றி இழிவாக பேசாதவாறு கீழ்வேளூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Minister ,Mass Media and Information ,cemetery ,Kivveloor ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...