×

கோயில் முன் மண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

நெல்லிக்குப்பம், மார்ச் 3:நெல்லிக்குப்பம் காமராஜ்நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முன் மண்டபம் அமைக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் நிலையத்திலும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் புகழ்வாய்ந்த பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கட்டிடம் மிகவும் பழமையாக இருந்ததால் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் மக்கள் முடிவு செய்து கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு பழைய கோயில் கட்டிடத்தை இடித்து அதே இடத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கோயிலின் முன்பு முன் மண்டபம் கட்ட ஊர் மக்கள் முடிவு செய்து கடக்கால் தோண்டும் பணியை துவக்கினார்கள்.

அப்போது கோயிலின் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் சரோஜினி என்பவர் கோயில் முன் மண்டபம் கட்டும் இடம் எங்களுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த இடத்தில் பணி செய்யக் கூடாது என கூறி பணியை தடுத்துள்ளார். இதுகுறித்து ஊர்மக்கள் அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை செய்தும் பலன் இல்லை. இந்நிலையில் நேற்று ஊர் மக்கள் ஒன்று கூடி பணியை துவங்கினார்கள். அப்போது அங்கு வந்த சரோஜினி மற்றும் அவரது மகள்கள் எங்கள் இடத்தில் பணி செய்யக் கூடாது என கூறி மீண்டும் பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாச வார்த்தைகளால் பேசி பணி செய்வதை தடுத்தனர்.


இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று நகராட்சி மேலாளர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோயிலில் முன் மண்டபம் அமைக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கோயிலுக்கு சொந்தமான இடத்தின் முன் மண்டபம் கட்ட அனுமதி வழங்குமாறு கேட்டும் மனு கொடுத்தனர்.  பின்னர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபுவிடம் பாதுகாப்பு தரக் கோரி மனு கொடுத்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்,பி, தாசில்தார் உள்ளிட்டவர்களிடம் கோயில் கட்டும் பணி செய்ய பாதுகாப்பு வழங்குமாறு மனு கொடுத்தனர்.

Tags : Protesters ,porch ,
× RELATED சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை...