×

சிஏஏவிற்கு எதிராக 11வது நாள் தர்ணா போராட்டம் எதிரொலி ரத்ததான முகாம் திடீர் நிறுத்தம்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 3:  காட்டுமன்னார்கோவிலில் சிஏஏவிற்கு எதிராக 11வது நாள் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே அங்கு நடந்த ரத்ததான முகாம் திடீரென நிறுத்தப்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
காட்டுமன்னார்கோவிலில் ரத்ததான முகாம் நடந்தது. இந்நிலையில் அதே பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய கட்சிகள் 11வது நாளாக நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் சிலர் ரத்ததான முகாமிற்கு ரத்தம் கொடுக்க சென்றனர். முன்னதாக மாவட்ட ரத்த வங்கி அலுவலர் ஹாமிசா மற்றும் காட்டுமன்னார்கோவில் அரசு தலைமை மருத்துவர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு உள்ள தனியார் கடை ஒன்றில் முகாமிட்டு ரத்த தானம் செய்ய வந்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யத் தொடங்கினர். அப்போது ரத்தம் கொடுக்க வந்த இளைஞர்கள் தர்ணா நடக்கும் பந்தலில் முகாமை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை மருத்துவ பணியாளர்கள் ஏற்க மறுத்து அவர்களிடம் நிலைமை குறித்து விளக்கினர். நடப்பு சம்பவங்கள் அனைத்தையும் கவனித்து வந்த காவல்துறை சிறப்பு பிரிவினர் இதுகுறித்து தங்களின் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட ரத்த வங்கி அலுவலர் மற்றும் தலைமை அரசு மருத்துவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் அந்தப்பகுதியில் ரத்ததான முகாமை தற்போது நடத்த வேண்டாம். மாறாக போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அதனை கைவிடும் வரை அந்தப் பகுதியில் ரத்ததான முகாம் நடத்த வேண்டாம். மற்றொரு நாள் நிகழ்ச்சியை மாற்றிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர். இதன்பேரில் ரத்ததான முகாம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 11 நாட்களாக சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய குடிமக்களுக்கு எதிரான மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் தர்ணா போராட்டத்தை பொது மக்களுக்கு பாதிப்பின்றி நடத்தி வருகின்றோம்.

 இதனை கைவிடுமாறு ஆளுங்கட்சியும் அதன் கீழ் உள்ள காவல்துறையும் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ரத்ததான முகாமிற்கு தடைவிதித்ததை காண்கிறோம். எங்கள் பகுதியில் இஸ்லாம் கட்சிகளின் சார்பாக அவ்வபோது இதுபோன்ற ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது அனைவருக்கும் தெரிந்தது. இதில் கொடையாக பெறப்படும் ரத்தத்தினை அரசுக்கு அளித்து வருகின்றோம். அதன்படி தற்போது நடந்துள்ள முகாமில் கலந்துகொண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ரத்தம் கொடுக்க வந்தோம். இதையும் ஆளும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எங்களின் சிறுபான்மை மக்களும் மற்றும் தொப்புள்கொடி உறவுகளாக விளங்கும் மாற்று மத சகோதரர்களும் அஞ்சமாட்டோம். சிஏஏ உள்ளிட்ட சட்டங்கள் திரும்பப்பெறும்வரை தங்களின் போராட்டம் காந்திய வழியில் அமைதியாக நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags : protest ,CAA ,Darna ,camp ,stop ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்