×

வாழ்வாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டு தர வேண்டும் குடிநீர் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை

புதுக்கோட்டை, மார்ச்3: புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நேற்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 450 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, சுமார் 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். விற்பனை முகவர்களாக சுமார் 2 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.

மேலும் எங்களிடம் ஓட்டுநராகவும், கூலி தொழிலாளராகவும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்த தொழிலை பிரதான வாழ்வாதரமாக வைத்து பிழைத்து வருகிறாம். தற்சமயம் நீதிமன்ற உத்தரவால் குடிநீர் உற்பத்தி தொழிற் கூடங்கள் மூடப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள குடிநீர் தேவையை 75 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறோம். இந்த தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு, பாதிப்படைந்து கொண்டிருக்கும் எங்களின் வாழ்வாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டுத்தர வேண்டும். மேலும் விவசாயத்திற்கு பயன்படும் சுத்திகரிப்பு செய்யாத தரமற்ற தண்ணீரை எடுத்து வந்து குடிநீர் கேன்களில் அடைத்து மக்களுக்கு சுகாதாரமற்ற நீரை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ம் அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் (நாட்டுப்படகு) சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் தினம் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 மீனவ கிராமங்கள் உள்ளது. அதில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் இரண்டு துறைமுகத்தில் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளது. இங்குள்ள விசைபடகுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி கடல்வளத்தை அழித்து வருகின்றனர்.

மேலும் டோக்கன் வழங்குவதற்கு முன்பே விசைப்படகு கடலுக்கு சென்று விடுகின்றனர். காலை 6 மணிக்கு நாட்டுப்படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தி வருகிறார்கள். இது சம்மந்தமாக மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் கொடுத்தோம். இதில் நடவடிக்கை என்ற பெயரில் இரண்டு படகை பிடிப்பதுபோல் பிடித்து 300 படகு தவறை மறைத்து விடுகின்றனர். இதுகுறித்து கேட்டால் எச்சரித்துவிட்டோம் என்று கூறுகின்றனர். மேலும் கடலில் மீன் குஞ்சுக்ள உற்பத்தி செய்யும் பாசிகளை எடுத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் கடலில் மீன்உற்பத்தி குறைந்து கடல்வளம் அழிந்து வருகிறது. மீனவர்களின் நலன் மீது அக்கறையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Drinking water sellers ,Collector ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்