×

அதிமுக ஆட்சியில் எந்த தேர்தலும் முறைப்படி நடைபெறவில்லை

கோவில்பட்டி, மார்ச் 3: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த தேர்தலும் முறைப்படி நடக்கவில்லை என்று திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர், கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி  வடக்கு மாவட்டத்தில் பல்வேறு  நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாளை (4ம் தேதி) தூத்துக்குடியிலும், வருகிற  14ம் தேதி கோவில்பட்டியிலும் ரத்ததான முகாம் நடக்கிறது.

ஏப்.21ம் தேதி தூத்துக்குடி மாநகரில் கனிமொழி எம்பி தலைமையில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.  
ஏப்.4ம் தேதி விளாத்திகுளத்தில் கனிமொழி எம்பி தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழாவும், ஏப்.11ம் தேதி விளாத்திகுளத்தில் டிகேஎஸ் இளங்கோவன் எம்பி பங்கேற்கும் பொதுக்கூட்டம்,  நலத்திட்ட உதவிகள் விழாவும் நடக்கிறது. ஏப்.4ம் தேதி  கோவில்பட்டி பகுதியில் 4 கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடக்கிறது.

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நாளை (4ம் தேதி) துணை சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான  மறைமுக தேர்தல் நடக்கிறது. இதனை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் முறைப்படி நடக்கும் என எதிர்பார்க்கிறோம். தூத்துக்குடியில் ஆவின் தேர்தலை அதிகாரிகள்  தள்ளி வைத்துள்ளனர். அதற்காக நோட்டீசும் ஒட்டி உள்ளனர். எப்போதும்போல் ஒட்டுவதுதான்  கூட்டுறவு தேர்தல். எந்த தேர்தலும் இந்த அதிமுக ஆட்சியில் முறைப்படி  நடக்கவில்லை. வேண்டிய ஆட்கள் பெயரை  நோட்டீசில் ஒட்டி விட்டு ஓடி  விடுகின்றனர். தேர்தல் நேரங்களில் அதிகாரிகள் அலுவலக அறையை பூட்டி விட்டு  சாரத்தோடு ஓடி விடும் அவலநிலைதான் தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : election ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...