×

பிளஸ்2 பொதுத்தேர்வு துவக்கம் தஞ்சை மாவட்டம் முழுவதும் 27,970 மாணவர்கள் எழுதினர்

தஞ்சை, மார்ச் 3: தஞ்சை மாவட்டத்தில் நேற்று துவங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 27,970 மாணவ, மாணவிகள் எழுதினர். தஞ்சை மாவட்டத்தில் 221 பள்ளிகளை சேர்ந்த 12,406 மாணவர்கள், 15,564 மாணவிகள் என மொத்தம் 27,970 பேர் 101 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 108 பேர் மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். இவர்களுக்கு வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டன.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காதுகேளாத வாய் பேச முடியாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும், பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 212 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 101 தேர்வு மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 1,723 பேர் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றினர்.
தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர் மணிமேகலை (பொ) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (இடைநிலை கல்வி) கோபிதாஸ் கண்காணிப்பு அலுவலகராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களல் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

தம்பியை தூக்கி வந்த அண்ணன்
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள 30 மையங்களில் 71 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,997 மாணவர்கள், 5,200 மாணவிகள் என மொத்தம் 9,197 மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் சோழபுரத்தை சேர்ந்த ஷாஜகான் மகன் முகம்மதுபர்வீஸ் (17) என்பவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தேர்வு எழுதுவதற்காக முகம்மதுபர்வீஸ் என்பவரை அவரது அண்ணன் ராசில்முகம்மது தூக்கி வந்தார்.

Tags : launch ,Plus Two General Elections ,district ,Tanjore ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...