×

உற்பத்தி தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் குடிநீர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

தஞ்சை, மார்ச் 3: உற்பத்தி தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் குடிநீர் விற்பனையாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர் சங்க தலைவர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகிறோம். விற்பனை முகவர்களாக 2 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும் எங்களிடம் டிரைவராகவும், கூலி தொழிலாளர்களாகவும் 10 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக வைத்து பிழைத்து வருகிறோம்.

தற்போது நீதிமன்ற உத்தரவால் குடிநீர் உற்பத்தி தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் நகரில் 75 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருகிறோம். இந்நிலையில் இந்த தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு பாதிப்படைந்து கொண்டிருக்கும் எங்களின் வாழ்வாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டுத்தர வேண்டும். பொதுமக்களின் குடிநீர் தேவை இயல்பு நிலையை அடைய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை ராமநாதபுரம் மூப்பனார் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அளித்த மனுவில், வரும் 29ம் தேதி அல்லது ஏப்ரல் 14ம் தேதி சித்திரை 1 அன்று தஞ்சை ராமநாதபுரம் மூப்பனார் தெருவில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் திடலில் காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை விழாவும் அதையொட்டி காலை 9 மணிக்கு வடக்கு, தெற்கு மூப்பனார் திடலில் சிறப்பு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள், நண்பர்கள் ஒருமனதாக பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் உத்தரவின்பேரில் சிறப்பு ஜல்லிக்கட்டு அனுமதி வழங்கி கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : closure ,manufacturing plants ,drinking water dealers ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...