×

குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக்

குளச்சல், மார்ச் 3: குளச்சல் நகராட்சியில் 30 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் நகராட்சியில் 24 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிக பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு நகராட்சி நேரடியாக சம்பளம் வழங்குவதில்லை. ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம்தான் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்தநிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, நேற்று காலை நகராட்சி முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, துப்புரவு தொழிலாளர்களுக்க ஒரு மாதம் தான் சம்பளம் வழங்கப்படவில்லை. அது விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட நிர்வாகிகள் 5 பேர், துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது கட்சி கொடியை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கொடை விழா நடந்து வருவதால், குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் குளச்சல் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் நகராட்சிக்கு சென்றனர். தொடர்ந்து அனுமதியில்லாமல் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை காவல்நிலையம் பிடித்து சென்றனர். இதையடுத்து அவர்களை விடுவிக்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cleaners Workers Strike ,Kulacha Municipal Office ,
× RELATED வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் குடிநீர் தொட்டிகள்