×

கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி

திருப்பூர், மார்ச். 3:திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 95 டிகிரிக்கும் குறையாமல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல் மற்ற பகுதிகளை விட திருப்பூரில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக 95 டிகிரிக்கும் குறையாமல் சுட்டெரித்து வருகிறது வெயில். தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலை 8 மணிக்கு துவங்கும் வெப்பத்தின் உக்கிரம் மாலை 5.30 மணி வரை குறைந்த பாடில்லை. குறைந்தபட்சமாக 90 டிகிரியும், அதிகபட்சமாக 97 டிகிரி வரையும் வெயில் கொளுத்துகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாலையில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமையால் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வெயில் கொடுமையால் குளிர்பானங்களை மக்கள் தேடி அலைகின்றனர். முக்கிய சாலைகளில் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, மோர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன. கடும் வெயிலால் வெப்பத்தால் உண்டாகும் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் குழந்தைகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...