×

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வறிக்கை கேரள அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஈரோடு, மார்ச் 3: ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திட்டங்கள் வகுப்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரிங்ரோடு திட்டம் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதேபோல், சமீபத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. காலை, மாலை மற்றும் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலற்ற ஈரோடாக மாற்றும் வகையில் திட்டங்கள் வகுப்பது தொடர்பாக ஒளிரும் ஈரோடு சார்பில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்ஒருபகுதியாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு, எஸ்பி சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில், ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஈரோடாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், இதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசின் நிறுவனமான தேசிய போக்குவரத்து திட்ட மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிறுவனமானது 3 மாதங்களில் ஈரோட்டில் ஆய்வு செய்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அறிக்கையை தாக்கல் செய்யும். இதற்காக ரூ.20 லட்சம் கேரள அரசு நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதசாரிகள் செல்ல வழி செய்தல், தேவையான இடத்தில் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசின் நிறுவனமான தேசிய போக்குவரத்து திட்ட ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம், கேரள மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் திட்டங்களை வகுத்து கொடுத்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் அறிக்கை கிடைத்ததும், அரசுக்கு அனுப்பி வைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  கூட்டத்தில், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிர்வாகிகள் அக்னிசின்னசாமி, ராபின், ரபீக், கேரள அரசின் சாலை தொழில்நுட்ப துறை அதிகாரிகள் ஷாகி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kerala State Institute for Traffic Reduction ,
× RELATED அதிர வைக்கும் ஆய்வு