×

மாவட்டத்தில் மிகவும் சிக்கலான பிரசவம் 17 கர்ப்பிணிகள் தீவிர கண்காணிப்பு

கோவை, மார்ச் 3:  கோவை மாவட்டத்தில் மிகவும் சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் 17 பேர் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்தார். நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் இறப்பை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், கர்ப்பிணிகள் இறப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளை பிரசவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற செவிலியர்கள் கர்ப்பிணிகளை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை ஆகிய பாதிப்புகளுடன் சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் குறித்த தகவல்களை வாட்ஸ்அப் குரூப் மூலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள 17 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “பிரசவத்தின் போது கர்ப்பிணிகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இதய பாதிப்புடன் சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள 17 கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் பிரசவத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். பின்னர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும். இதனால், கர்ப்பிணிகள் இறப்பு குறையும்” என்றார்.

Tags : childbirth ,district ,women ,
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி