×

பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த துணை கலெக்டர் * பட்டியல் போட்டி வசூல் வேட்டை * பரபரப்பு தகவல்கள் அம்பலம்

வேலூர், மார்ச் 3: வேலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை கலெக்டர், பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(31), என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முன்னோர்களின் பூர்வீக சொத்தை அவரது பெயருக்கு கிரையம் செய்தார். இதற்கான முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக கூறிய வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரை கட்டண துணை கலெக்டர் தினகரன், இதை சரிசெய்ய ₹50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கார் டிரைவர் ரமேஷ்குமார் மூலமாக தினகரன் லஞ்சப் பணத்தை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்பேரில் கடந்த 28ம்தேதி இரவு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று லஞ்சப் பணம் ₹50 ஆயிரத்தை கொடுத்தார்.

அதனை வாங்கிக் கொண்டு காரில் பறந்த தினகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச்சென்று மடக்கிபிடித்தனர். மேலும் அவரது கார் டிரைவர் ரமேஷ்குமாரும் பிடிபட்டார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது அலுவலகம், காட்பாடியில் உள்ள வாடகை வீடு, போளூர் உள்ள வீடு ஆகியவற்றில் நடத்திய சோதனையில் மொத்தம் 79 லட்சத்து 9 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், தினகரன் ஒவ்வொரு நாளும் யார் யாரிடம் பணம் பெற வேண்டும் என்று பட்டியல் தயாரித்து வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக மாடுவிடும் திருவிழா நடந்த இடங்களுக்கு சென்ற தினகரன் ஆய்வு செய்வார். அவரது கார் டிரைவர் விழாக் குழுவினரை சந்தித்து டெபுடி கலெக்டருக்கு மரியாதை செய்யுங்க என்று வெளிப்படையாகவே லஞ்சம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளார். இவ்வாறு லட்சக்கணக்கில் லஞ்சப்பணத்தை வசூலித்துள்ளனர்.

தினமும் யார் யாரை சந்தித்து லஞ்சம் வாங்க வேண்டும், என்று டிரைவர் ரமேஷ்குமாரிடம் தினகரன் பட்டியல் கொடுத்துவிடுவாராம். ₹2,000 நோட்டு விரைவில் செல்லாததாகிவிடும் என்ற சந்தேகத்தால் புதிய ₹500 கட்டுகள்தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் வசூல் செய்து வந்துள்ளார். அலுவலக பணிக்காக காரில் சுற்றிய நேரத்தை விடவும் லஞ்சம் வாங்குவதற்காகவே காரில் சுற்றிய நேரம் தான் அதிகம் என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தினகரனுக்கு 11 அதிகாரிகள் உதவியதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தினகரன் லட்சம், லட்சமாக வாங்கிய லஞ்சப்பணத்தை வைத்துக் கொண்டு பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது உள்ளிட்ட பரபரப்பு தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து உளவுப் பிரிவு போலீசார் கூறுகையில்: வேலூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் இளநிலை உதவியாளர் ஒருவரிடம் தினகரன் மிக நெருக்கமாக பழகியுள்ளார். அவரது செலவுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியுள்ளார். மேலும் முத்திரைக்கட்டணம் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் பெண் அதிகாரியே அதை கவனித்து வந்துள்ளார். இதன்மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு இவரே பணியை முடித்து கொடுத்துள்ளார். பல்வேறு புகார்கள் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். துணை கலெக்டரின் ஆதரவால் ராணிப்பேட்டையில் 1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார். அரசின் அனுமதி பெற்று இந்த வீடு கட்டினாரா? அல்லது முறைகேடாக லஞ்ச பணத்தில் வீடு கட்டினாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தினகரன் தனது அலுவலகத்திற்கு சொந்த வேலை காரணமாக வரும் சில பெண்களிடம் கவர்ச்சியாக பேசி தனது வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர் தனது வலையில் சிக்கிய பெண்களை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். காட்பாடி அடுத்த தாங்கல் கிராமத்தில் தனியாக வாடகை வீடு எடுத்தும் சல்லாபமாக வாழ்ந்து வந்துள்ளார்.

பல லட்சங்கள் செலவு செய்து சொகுசு கார், சொந்த ஊரில் பங்களா என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவரின் உல்லாசம் அலுவலகத்திலும், சொகுசு ஓட்டல்கள் லாட்ஜ்களிலும் அரங்கேறியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடைய சென்னையில் உள்ள வருவாய்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவுக் கடிதம் வந்தவுடன் லஞ்ச வழக்கில் கைதான துணை கலெக்டர் தினகரன் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று வேலூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'பாக்ஸ்: ஸ்ட்ரிக்ட் ஆபிசராக பாவ்லா காட்டிய துணை கலெக்டர்'
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் துணை ஆட்சியராக தினகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலகத்திற்கு டிப்-டாப் டிரெஸ்சில் வலம் வந்தார். அதிகார தோரணையில், ‘என்ன வேலை செய்றீங்க, ஒழுங்க இருக்கணும், இல்லைன்னா அவ்ளோதான்’ என்று பார்வையாலேயே மிரட்டுவாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் ஆபீசர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... நாம உஷாரா இருக்கணும் என்று கூறிக்கொள்வார்களாம்.

ஸ்ட்ரிக் ஆபீசராக பாவ்லா காட்டிய துணை கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதும் போவதுமாக எப்போது பிசியான அதிகாரியைப் போன்றே காட்டிக்கொண்டுள்ளார். நாளடைவில் துணை ஆட்சியரின் சுயரூபத்தை ஊழியர்கள் அறிந்து கொண்டனர். கொடுக்க வேண்டியதை கொடுக்காவிட்டால் கோபத்தின் உச்சிக்கே சென்று திட்டித் தீர்த்து விடுவாராம். இந்த மிரட்டல்கள் எத்தனை காலம் என்று காத்திருந்த நிலையில் அவராகவே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்ட விவகாரத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Contest Collection Hunting ,
× RELATED கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில்...