×

மின்வேலியில் சிக்கி இறந்த ஒற்றை யானையை புதைத்த விவசாயி 2 பேர் கைது, ஜேசிபி உரிமையாளருக்கு வலை

குடியாத்தம், மார்ச் 3: குடியாத்தம் அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இறந்த ஒற்றை யானையை யாருக்கும் தெரியாமல் தனது விவசாய நிலத்தில் புதைத்த விவசாயி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்னர். மேலும் தலைமறைவான ஜேசிபி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, மோர்தானா, வீரிச்செட்டிபள்ளி, திட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை அட்டகாசம் செய்து வந்தது. விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை துவம்சம் செய்து வந்தது. இதனை அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அது விரட்டும்போது வெளியேறி மீண்டும் கிராமங்களில் புகுந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒற்றை யானை வனப்பகுதியை ஒட்டிய தனகொண்டபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. அப்போது, அங்கு விவசாயி பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய யானை பரிதாபமாக இறந்தது.

யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிச்சாண்டி, யாருக்கும் தெரியாமல் அவருக்கு சொந்தமான நிலத்திலேயே ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி யானையை புதைத்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் தாசில்தார் வத்சலா மற்றும் தாலுகா போலீசார், வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று புதைக்கப்பட்ட யானையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் புதைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து நில உரிமையாளரான பிச்சாண்டி மற்றும் ஜேசிபி உதவியாளர் ெசல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ஜேசிபி உரிமையாளர் அசோக் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : Jaspi ,owner ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது