×

புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மைய்யங்கள்

திருப்பூர், மார்ச்.2: திருப்பூரில் இயங்கி வரும் இ-சேவை மையங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் நேரடியாக விண்ணபிக்கும் பொது மக்கள் அலைக்கழிப்பு ஏற்படுவதால் இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழகத்தில்  அனைத்து மாவட்டங்கள், தாலுகா, மாநகராட்சி, நகராட்சி உட்ட பல்வேறு அரசு  அலுவலகங்களில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை தொடர்பான  சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சான்றிதழ்கள்  வேண்டி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 பொது இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அதிகாரிகள் ஆன்லைன் மூலமாக பரிசீலித்து ஒப்புதல் வழங்கி வருகின்றனர். விண்ணப்பதாரர் இ-சேவை மையத்திலேயே சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடைகின்றனர்.  தற்போது செல்போன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது  இ-சேவை மைய செயல்பாடுகளை கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மதிப்பீடு  வழங்கும் நடைமுறையை தொடங்கியுள்ளது. தற்போது வருவாய்த்துறையின் 20 வகையான  சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர்  மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இ-சேவை மையங்களில் புரோக்கர்களின்  ஊடுருவல் அபரிமிதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது.

திருப்பூர்  மாநகராட்சி, தாலுாகா ஆகியவற்றில் போது இ-சேவை மையங்களில் நேரடியாக  பொதுமக்கள் சென்று விண்ணப்பித்து விட்டு காத்திருந்தால் அதிகாரிகள்  ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பதும், தள்ளுபடி செய்வதுமான நடவடிக்கைகளில்  ஈடுபடுகின்றனர்.
அதே நேரத்தில் இ-சேவை மையங்களில் உலாவரும்  புரோக்கர்கள் காலை நேரங்களில் இ-சேவை மையங்களுக்கு படையெடுத்து  விடுகின்றனர். இவர்கள் அப்பாவி மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி உடனடியாக  கிடைக்க வழிவகை செய்து தருவதற்கு அதிகாரிகளின் பெயரை சொல்லி  சான்றிதழ்களுக்கு ஏற்றவாரு ரூ.500 முதல் 2000ஆயிரம் வரை கமிஷன்  வாங்கிக்கொண்டு உடனுக்குடன் பெற்றுக்கொடுத்து வருவதகாவும் பொது மக்கள்  கூறுகின்றனர்.  சாதாரண பொதுமக்கள் இ-சேவை மையங்களில்  விண்ணப்பிக்கும் சான்றிதழ்கள் மீது விரைந்து ஆய்வு செய்து அதிகாரிகள்  ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  தமிழ்மணி  கூறியுள்ளார்.

Tags : centers ,brokers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!