×

பாதாள சாக்கடை சேதம் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேக்கம்

ஈரோடு,  மார்ச் 2:   ஈரோடு அன்னை சத்யா நகரில் பாதாள சாக்கடை சேதமடைந்ததால்  குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதி  மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அருகே அன்னை  சத்யா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக 448  அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை  திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு பாதாள சாக்கடை இணைப்பு  வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை சரியான  திட்டமிடல் இல்லாமலும், தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஆனால், இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்னை  சத்யா நகரில் போடப்பட்ட பாதாள சாக்கடையின் மேல்புறம் போடப்பட்ட வட்ட  வடிவிலான சிலாப் கற்கள் உடைந்து, அதில் உள்ள கழிவு நீர் அப்பகுதியில்  குளம்போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன  ஓட்டிகள், பாதசாரிகள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும்,  கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை தரமற்ற முறையில்  அமைத்துள்ளனர். இதில், பாதாள சாக்கடை மேல்புற சிலாப் கற்கள் சாலையின் நடுவே  அமைத்துள்ளனர். உறுதியற்ற முறையில் அமைத்துள்ளதால், உடைந்து தற்போது கழிவு  நீர் தேங்கி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும்,  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதாள சாக்கடைக்கு தரமான  பொருட்களை பயன்படுத்தி, அதனை துப்புரவு பணியாளர்கள் மூலம் முறையாக  பராமரித்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராது. ஆனால், மாநகராட்சி  அதிகாரிகள் இதை கண்டுகொள்வதே கிடையாது. எனவே, உடைந்த பாதாள சாக்கடை சிலாப்  கற்களை மாற்றி, தரமானதாக அமைக்க வேண்டும். அன்னை சத்யா நகர் பகுதியில்  சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...