×

சித்தோடு ஆவின் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் அவதி

ஈரோடு, மார்ச் 2:   ஈரோடு அருகே சித்தோடு ஆவின் நிறுவனம் எதிரே உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால், மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.  ஈரோடு அருகே சித்தோடு ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் டாஸ்மாக் கடை (எண்: 3483) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் வந்து செல்கிறார்கள். இந்த டாஸ்மாக் கடை பஸ் ஸ்டாப் அருகிலேயே அமைந்துள்ளதால் குடிமகன்கள் நிழற்குடையை ஆக்கிரமிப்பு செய்து குடித்து விட்டு அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களும், பெண்கள், பொதுமக்களும் இந்த பஸ் ஸ்டாப்பிற்கு வரவே அச்சப்பட்டு வருகிறார்கள். போதை தலைக்கேறிய நிலையில் குடிமகன்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்பவர்களை ஆபாசமாக பேசி வருகின்றனர்.

மேலும் இந்த டாஸ்மாக் குடியிருப்பு பகுதியில் உள்ளதால், இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை வீட்டின் முன்பு வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அகற்றப்படாமல் உள்ளது.  இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: சித்தோடு ஆவின் பால் பண்ணைக்கு எதிரில் பஸ் ஸ்டாப் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடையை அமைத்துள்ளனர். இந்த கடையை சுற்றிலும் பாரதி பெருமாள் நகர், சமத்துவபுரம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த பஸ் ஸ்டாப்பிற்கு தான் செல்ல வேண்டும். ஆனால் பஸ் ஸ்டாப் அருகிலேயே கடை அமைந்துள்ளதால், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு நிழற்குடையை ஆக்கிரமித்து அங்கு அமர்ந்து குடிக்கிறார்கள். குடிபோதையில் ஆங்காங்கே குடிமகன்கள் அரைநிர்வாண கோலத்தில் படுத்து கிடக்கிறார்கள். இதனால் மாணவிகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பஸ் ஸ்டாப்பில் பெண்கள் நிற்கவே முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்தனர்.

Tags : task shop ,Siddhode Aavin ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்...