×

கார் ஒப்பந்த வாடகைக்கு விட்டதில் பிரச்னை ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபட்ட 14 பேர் கைது

மன்னார்குடி, மார்ச் 2: பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆலம்துரை (28) வழக்கறிஞர். இவருக்கு சொந்தமான கார் ஒன்றை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் (26) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அந்த காரை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கோபி (28) என்பவரிடம் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில் ஆலம்துரைக்கு சொந்தமான காரை எடுத்து கொண்டு கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் கோபி சென்னைக்கு செல்லும்போது உளுந்தூர் பேட்டை அருகே கார் விபத்துக்குள்ளானதில் பலத்த சேதமடைந்தது. கோபிக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து கோபி வெங்கடேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் வெங்கடேசும், காரின் உரிமையாளருமான ஆலம்துரையும் உளுந் தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று காரை மீட்டனர். கார் சுமார் 1 லட்சம் மதிப்பில் சேதமடைந்ததால் அந்த தொகையை கோபியிடம் இருந்து பெற்று தருவதாக ஆலம்துரையிடம் வெங்கடேஷ் கூறினார். அதற்கு கோபியும் சம்மதம் தெரிவித்து அடுத்த சில வாரங்களில் ரூ.1 லட்சத்தை வெங்கடேஷிடம் கொடுத்து விட்டு அதற்கு ஆவணமாக ஒரு பேப்பரில் எழுதி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

கோபியிடமிருந்த பணத்தை பெற்ற வெங்கடேஷ் அதனை காரின் உரிமையாளர் ஆலம்துரையிடம் கொடுக்காமல் நீண்ட நாட்களாக சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளார். பின்னர் வெங்கேடஷ் கடந்த 2018ம் ஆண்டு திடீரென வெளிநாட் டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ஆலம்துரை தனக்கு சேர வேண்டிய ரூ.1 லட்சத்தை வெங்கடேஷிடம் பலமுறை கேட்டும் பலனில்லை. அதனால் பணத்தை கேட்டு கோபிக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஆலம்துரை தனது நண்பர்கள் 13 நபர்களுடன் இரண்டு சொகுசு கார்களில் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் உள்ள கோபி வீட்டிற்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அப்போது கோபி வீட்டில் இல்லாததால், கோபியின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் ஆலம்துரை பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கோபி வெங்கடேஷிடம் ஏற்கனவே ரூ.1 லட்சம் பணம் கொடுத்து விட்டு எழுதி வாங்கி விட்டதாக கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த ஆலம்துரை மற்றும் அவருடன் வந்திருந்த அடியாட்கள் கோபியின் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட கிராம மக்கள் சிலர் தகராறு குறித்து பரவாக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் எஸ்ஐ ஜெகஜீவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனையறிந்த ஆலம்துரை மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் கார்களில் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவம் குறித்து கோபியின் தந்தை ஜெயராமன் (58) பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தப்பியோடிய அந்த கும்பல் நீடாமங்கலத்தில் வேறு ஒரு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த நீடாமங்கலம் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் தகராறில் ஈடுபட்டு தப்பியோடி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஆலம்துரை உள்ளிட்ட 14 பேரையும் நீடாமங்கலம் போலீசார் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவீ மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் பிடிபட்ட 2 கார்களிலும் சோதனை நடத்தியதில் அதில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வந்த நபர்கள் கூலி படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகமடைந்து விசாரணையை தீவிர படுத்தினர்.

பின்னர் கோபியின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் ஆலம்துரை (28), இவருடன் அடியாட்களாக வந்த துரைமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (24), சதிஷ்குமார் (30), வேப்பந்தட்டை ஜெயராமன் (24), ஆத்தூர் அஜித் (22), ஆத்தூர் சபரிநாத் (25) உள்ளிட்ட 14 நபர்களை கைது செய்தனர். மேலும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 14 நபர்களையும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் அனைவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : arms dispute ,
× RELATED கார் ஒப்பந்த வாடகைக்கு விட்டதில்...