×

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க தஞ்சையில் சோற்று கற்றாழை ஜூஸ் விற்பனை விறுவிறுப்பு

தஞ்சை, மார்ச் 2: கோடை காலத்திற்கேற்ற சோற்றுகற்றாழை ஜூஸ் தஞ்சையில் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. கோடை காலத்தில், சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் கதிர் வீச்சின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. சவரம் செய்த பின், முகத்தில் பருக்கள், எரிச்சல் ஏற்படாமலிருக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகளில் உள்ள சதைப்பகுதியை கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது கோடைகாலத்தில் வரும் வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

கற்றாழையின் இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.

செடிகள், நட்ட இரண்டாவது வருடத்தில்தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாகக் கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்தவுடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து சதைப்பகுதியை பிரித்தெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழலில், சோற்றுக் கற்றாழை, மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது மற்றும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலைகளில் காணப்படும் சதை பகுதி, கோடை காலத்தில் வரும் படைநோய், படர்தாமரை போன்ற பல தோலில் ஏற்படும் அரிப்புகளையும், சருமத்தில் உள்ள குறைகளையும் ஆற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. செடியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு, பலவகையான செரிமான நிலைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக உட்கொள்ளப்படுகிறது.

கற்றாழை சதைப்பகுதியை உட்கொள்ளுவதனால் கோடை காலத்தில் ஏற்படும் கட்டிகள் வளர்வதைத் தடுக்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட சோற்று கற்றாழை ஜூஸ் தஞ்சை பகுதியில் மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்து வந்து, அதனை சிவகங்கை பூங்கா, சத்யா ஸ்டேடியம், புதிய, பழைய, தற்காலிக பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கப் ரூ. 30க்கு விற்பனை செய்யப்படுவதால், ஏராளமான பொது மக்கள், கடந்த சில நாட்களாக அதிகமாக குடித்து வருகின்றனர். ரசாயன குளிர்பானத்தால் பல்வேறு நோய்கள், வருவதால் கடந்த சிலஆண்டுகளாக இயற்கை பானத்திற்கு பொதுமக்கள் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED இன்று குருபெயர்ச்சி: திட்டை...