×

தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்து தூங்கும் அவலம்

தஞ்சை, மார்ச் 2: தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாததால், தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக நோயாளிகளை அனுமதித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்படுவதால், தஞ்சையை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, தினந்தோறும் நோயாளிகளை கொண்டு வருகின்றனர்.

அவர்கள் பல நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்பில் படுக்கை வசதிகள், நவீன முறையில் மருத்துவ வசதியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். ஆனால் பழைய வார்டுகளை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். மருத்துவமனையிலுள்ள ஆண்கள், பெண்கள் வார்டு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து சேர்வதால், படுக்கைகள் பற்றாக்குறையாகியுள்ளது.இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, செவிலியர்கள் பாய்களை வழங்கி, தரையில் படுக்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் பாய்கள், பல நாட்களானதால் கிழிந்தும், பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருப்பதால், அதில் படுத்தாலும் தரையில் படுக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் நோயாளிகள் நிம்மதியாக படுக்க முடியால் அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி பணியிலுள்ள செவிலியர்களிடம் கேட்டால், நோயாளிகள் அனைத்து பெட்டுகளிலும் படுத்துள்ளார்கள். உங்களுக்கு பெட் இல்லை. அதனால் தான் தரையில் படுக்க சொன்னோம் என பதில் கூறுகிறார்கள்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெரும்பாலானோர் முதியவர்கள், கை, கால் முடியாதவர்கள், நடக்க, எழுந்திருக்க முடியாதவர்கள் என சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை தரையில் படுத்து சிகிச்சை பெற சொல்வதால்,நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதே போல் படுக்கையிலுள்ள பெட்டுகள் கிழிந்தும், நார்கள் வெளியில் தெரிந்தும், சுத்தமில்லாமல் இருப்பதால், அதில் படுக்கும் நோயாளிகளுக்கு மேலும் நோய்கள் பரவும் அதிக வாய்ப்புள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனைத்து வகையான பணிகளும் செய்து வந்தாலும், மருத்துவமனையை நம்பி வரும் ஏழை நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாதது வேதனைக்குரியதாகும். எனவே மாவட்ட நிர்வாகம், உடனடியாக வார்டுகளில் போதுமான வகையில் படுக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். கிழிந்துள்ள பெட்டுக்களை உடனடியாக மாற்றி, அதில் படுக்கும் நோயாளிகளை, வேறு நோய்கள் தாக்காமல் பாதுகாக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hospital ,Tanjore Medical College ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...