×

குடியிருப்பு பகுதியில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடு: பொதுமக்கள் அவதி

பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம், மல்லிகா நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி சார்பில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் வேறு வழியின்றி குப்பை கழிவுகளை சாலையோரம் வீசும் நிலை உள்ளது.  இதனால், அங்குள்ள தெருக்கள் குப்பை குவியலாக காட்சியளிப்பதுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், இந்த குப்பை கழிவுகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் கிளறுவதால், குப்பை சிதறி தெருக்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் பொது சுகாதாரத்தை பேணி காப்பதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்காததால், சாலையோரம் மக்கள் குப்பையை கொட்டும் நிலை உள்ளது.

இந்த குப்பையை முறையாக அகற்ற வேண்டும், தொட்டிகள் வைக்க வேண்டும், என நகராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டாக கோரிக்கைவிடுத்து வருகிறோம். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி உள்ளிட்டவைகளால் தவித்து வருகிறோம். தற்போது, பன்றிகள் குடியிருப்பு பகுதியில் அதிகளவில் சுற்றித் திரிவதால், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எங்களிடம் இருந்து அனைத்து வரிகளையும் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம், அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.  எனவே, இப்பகுதியில் பொதுமக்கள் சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் போதிய தொட்டிகளை வைக்கவும், குப்பையை முறையாக அகற்றவும், குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...