×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு போல் மீன்பிடி தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும்

நாகை,மார்ச்2: கடல் மற்றும் கடல்கரை சார்ந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு கூறினார். தேசிய மீனவர் பேரவை தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு நாகை, கடலு£ர் ஆகிய மாவட்டங்களை மையமாக கொண்ட பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டத்தை ரத்து செய்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பயிர் செய்வதை எப்படி வேளாண்மையாக முழுமையாக ஏற்றுக்கொண்டது போல் கடலில் மீன் பிடிப்பதும் வேளாண்மை தான். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது கடல் பகுதியையும் வேளாண் மண்டலமாக கருதப்பட்டு கடற்கரை பகுதியும், மீன்பிடி தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வேளாண் மண்டலத்திற்கான சட்டத்தின் சொல்லப்பட்டுள்ளது. இதனால் ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது. பாரம்பரிய மீன்பிடி தொழிலையும், மீனவர்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கடல் மீன்பிடி சட்ட மசோதாவை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் பாரம்பரிய மீன்பிடி தொழில் அழியும். பன்னாட்டு கம்பெனிகள் நுழைந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பார்கள். எனவே இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருக்க இந்த மசோதாவால் ஏற்படும் தீமைகள் குறித்து கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பாராளுமனத்தில் பேச வேண்டும். வரும் 7ம் தேதி நாகை அருகே ஒரத்தூர் பகுதியில் அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நடும் விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீனவர்களின் வாழ்க்கையை அழிக்கும் கடல் மீன்பிடி சட்டத்தை ரத்து செய்வதாகவும், கடல் மற்றும் கடல்கரை சார்ந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.

Tags : agriculture zone ,
× RELATED கரும்பு உற்பத்தி மற்றும் மீன்பிடி...