×

உப்புபட்டி ஓடையில் மேம்பாலம் அமையுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி, மார்ச் 2: வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளம் சாலை உப்புபட்டி கிராமஓடையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புபட்டியில் தரைப்பாலம் உள்ளது. புளிப்பாறைபட்டி, கிளியம்பட்டி, மம்சாபுரம், காக்கிவாடன்பட்டி பகுதி கிராமங்களில் பெய்யும் மழைநீர் வைப்பாற்று ஓடை வழியாக உப்புபட்டியை கடந்து வெம்பக்கோட்டை அணைப்பகுதிக்கு செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் 6 அடி வரை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும்.

உப்புபட்டி ஓடை ஆலங்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் மழைநீர் சென்றால் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படும். இதே போல் ஆலங்குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு எட்டாக்காபட்டி, எதிர்கோட்டை, உப்புபட்டி, காக்கிவாடன் பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். உப்புபட்டி ஓடை ஆலங்குளம் சாலையில் இருந்து 4 அடி பள்ளத்தில் உள்ளது.
சாலை மெட்டுப்பகுதியில் உள்ளதால் மழைநீர் 2 அடி சென்றால் கூட வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. மழைக்காலங்களில் பட்டாசு ஆலை வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 20 கி.மீ தூரம் உள்ள வெம்பக்கோட்டை வழியாக சுற்றி சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் போன்ற இடங்களுக்கு செல்கின்றன.

சிவகாசி-ஆலங்குளம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் அரைமணி நேரத்திற்கு ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் தனியார் பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது. உப்புபட்டி ஓடையில் மழை நீர்சென்றால் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பஸ்கள் 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆலங்குளத்தில் அரசு சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களும் மழை காலத்தில் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் தான் உள்ளது. எனவே, சாலையை விட தாழ்வாக உள்ள உப்புபட்டி தரைப்பால ஓடையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,saltpetti stream ,public ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...