கம்பம், மார்ச் 2: தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் சுருளிப்பட்டி கிராமம் உள்ளது.இந்த ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய, ஊர் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து, ஊரில் உள்ள 5 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீரில் வண்ணார்துறை பகுதியில் செல்லும் சாக்கடை கழிவுநீர் உறைகிணறு அருகே சென்று கலப்பதாகவும், இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தலைவர் நாகமணி வெங்கடேசன் கேட்டபோது, ‘பொதுமக்களுக்கு விநயோகிக்கப்படும் குடிநீரில், கழிவுநீர் கலப்பதை தடுக்க, பெரியாறு அருகே உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டு, கழிவுநீர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சுருளிப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்’ என்றார். அப்போது உறுப்பினர் எம்.அறிவுசெல்வன், செயலர் ஈஸ்வரன் ஆகியோர் இருந்தனர்
