×

இடைநிலை ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்தக் கூடாது ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

சிவகங்கை, மார்ச். 2:  பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுப்பணியில் உயர்நிலை, மேனிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுப்பணியில் உயர்நிலை, மேனிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் இந்த தேர்வு காலகட்டத்தில் இந்த ஆசிரியர்களின் கீழ் படிக்கும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கல்விப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே இந்த ஆசிரியர்களை மேற்கண்ட தேர்வுப்பணிக்கு பயன்படுத்தக்கூடாது என கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு உயர்நிலை, மேனிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் அவர்களை தேர்வுப்பணியில் இருந்து விடுவிக்குமாறும் மாவட்ட கல்வித்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இன்று முதல் பிளஸ் 2 தேர்வும், மார்ச் 4முதல் பிளஸ் 1 தேர்வும் தொடங்க உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இம்மாதம் முழுவதும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் கூறியதாவது: அரசு பொதுத்தேர்வை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படுவதால் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையுள்ள மற்ற வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளதாக காரணம் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. தொடர்ந்து ஆண்டுதோறும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நிலைப்பாடு எடுத்து குளறுபடி செய்கின்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களின் கல்வியையும் பாதுகாக்க வேண்டும். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தேர்வுப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.

Tags : Teachers ,
× RELATED சமூக இடைவெளி கடைப்பிடிக்காத...