×

தென்னிலை அருகே சாலையோரம் சாயக்கழிவு கொட்டிய லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

கரூர், மார்ச் 2: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே சாயக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டியதால் அந்த லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அதே லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்துள்ள கூனம்பட்டி, துக்காச்சி, கொள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நேற்று காலை சாயக்கழிவுகள் லாரிகளில் வந்து கொட்டப்பட்டன. தொடர்ந்து, இதே பகுதியில் கூடுதலாக இரண்டு லாரிகள் வந்து சாயக்கழிவுகளை கொட்டினர். அதனால் ஆத்திரமடைந்த இந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, சாயக்கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சாயக்கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்தனர். சாயக்கழிவுகளை இங்கு கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசும், இதனை இந்த பகுதியில் கொட்டுவதால் கிராமப் பகுதியினர் பாதிக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. சாயக்கழிவு லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு தென்னிலை போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள ஒரு சாயப்பட்டறை கழிவுகளை இங்கு வந்து கொட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் கண்டு பிடித்துள்ளனர் என தெரியவந்தது. மேலும், இரண்டு லாரிகளில் இருந்து கொட்டப்பட்ட சாயக்கழிவுகள் திரும்பவும் லாரியில் ஏற்றி பவானிக்கே போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Civilians ,roadside ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை