நாங்குநேரி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் அரசு பஸ்களில் மாணவர்களிடம் கட்டாய டிக்கெட் வசூல்

நாங்குநேரி, மார்ச் 2: நாங்குநேரி பகுதியில் இயங்கும் அரசு டவுன் பஸ்களில், பயணிக்கும் மாணவர்களிடம் இலவச பாஸ் வைத்திருந்தாலும் கண்டக்டர்கள் டிக்கெட் கட்டணத்தை கட்டாயமாக வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பாளை., தளபதிசமுத்திரம், வள்ளியூர், களக்காடு, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள், கல்வி நிலையங்களுக்கு சென்று வர வசதியாக இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. பலருக்கு இதுவரை புதிய பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு வழங்கிய பஸ் பாசுடன் அரசு பஸ்சில் செல்லும் கிராமப்புற மாணவர்களிடம், கண்டக்டர்கள் இந்த பாஸ் செல்லாது எனக்கூறி கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் குடும்ப சூழலிலும் தினமும் டிக்கெட் எடுப்பதற்கு குழந்தைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் விடுமுறை எடுக்கின்றனர் என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு பணிமனை மேலாளர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கவும், பாஸ் வைத்திருக்கும் மாணவர்களிடம் கட்டாயமாக டிக்கெட் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>